The English version is available here. Translation by Jayachandran Masilamani, co-published with Minnambalam.
மொழிபெயர்ப்பாளர்: ஜெயசந்திரன் மாசிலாமணி, ஃப்ரீலான்ஸர்
‘’இப்பல்லாம் யாரு சாதி பாக்குறா?’’ என்ற ‘’பொது நம்பிக்கைக்கு’’ மாறாக, சாதி அமைப்பு இந்தியா, இந்து மதம், கடந்து, தெற்காசியா முழுதும், அங்கிருந்து புலம்பெயர்ந்தோர் மத்தியிலும், அனைத்து மதங்களிலும் இயங்கும் வன்முறையுடன் கூடிய ஒடுக்குமுறைச் சமூக அமைப்பாகும். உலகெங்கிலும் உறவுமுறைகளைப் பேணுவதற்கும்தங்கள் பாதுகாப்பை உறுதி செய்துகொள்வதற்கும் மூலதனத்தை எளிதாக அபகரிப்பதற்கும் சாதி கட்டமைப்பு தொடர்ந்து செயல்படுகிறது.பொதுவாக சமூகநீதி குறிப்பாக தொழில்நுட்பம் சார்ந்த அசமத்துவ உரையாடல்களில் இன மற்றும் நிற பேதம் குறித்த விமர்சனம் அதிகம் இடம்பெறுகிறது. சாதிய அமைப்பு அரிதாகவே கவனம் பெறுகிறது அல்லது இரண்டாம்பட்சமாகத் தான் கருதப்படுகிறது. இப்படி மறைப்பதன் மூலமாக புலம்பெயர்ந்த தெற்காசிய ஆதிக்க சாதியினர் மேற்கத்திய அதிகார வட்டங்களின் பயனாளிகளாக இருந்து வருகிறார்கள் என்பதை பின்வரும் உரையாடல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
க்ரிட்டிக்கல் காஸ்ட் டெக் ஸ்டடீஸ் பாடத்திட்டத்தின் ஆசிரியரும், ஆக்ஸ்ஃபோர்ட் இன்டர்நெட் இன்ஸ்டிடியூட், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளருமான முரளி சண்முகவேலனிடம் உரையாடினோம். முரளி இந்த இயக்கவியல் ஒவ்வொன்றையும் புரிந்துகொள்ளும் வகையில் பேசுகிறார். "பார்ப்பனர்களால் மட்டுமே முடியும்" என்று கூறப்படும் தொழில்நுட்பங்களை உண்மையில் உருவாக்கியதும் காத்து வந்ததும் தலித்துகள், ஒடுக்கப்பட்ட சூத்திரர்கள் மற்றும் பழங்குடி மக்கள் என்ற வரலாற்று உண்மையை எடுத்துரைக்கிறார். இனி உரையாடலுக்கு செல்வோம்.
கதீஜா:சாதி என்றால் என்ன, அது எவ்வாறு வழிவழியாக வருகிறது என்பதை எங்களுக்கு மேலோட்டமாகப் புரிய வைக்க முடியுமா?
முரளி: இந்த உரையாடல் மூலமாக எனக்கு இப்பொருள் குறித்து விளக்குவதற்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி கதீஜா.சாதி என்றால் என்ன என்பதை விளக்குவது மிகவும் அவசியமானதாகும்.பெரும்பாலும், சாதி என்ற சமூகநோய் இந்தியாவுடன், இந்துக்களிடம் மட்டுமே தொடர்புடைய ஒரு அசமத்துவ பிரிவாக பேசுகிறார்கள். சாதி என்பது உடலில் புரையோடிப் போன ஒரு புற்றுநோயைப் போன்றது. தெற்காசியாமுழுவதுமாகபரவிக்கிடக்கிறது.ஆதிக்க சாதி இந்துகள் சொல்வது போல இது பிரிட்டிஷ் பேரரசால் கண்டுபிடிக்கப்பட்டது இல்லை. பாகிஸ்தான், இலங்கை, மலேசியா, இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளில் அரசியலமைப்புச் சட்டத்தில் சாதி என்பது வெளிப்படையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷில் உள்ள மெத்தோர்ஸ்எனும் சாதியினர்(தமிழகத்தில் உள்ள அருந்ததியர் சாதிக் குழுவினர்களைப் போல) கைகளால் மலம் அள்ளும் வேலை செய்கிறார்கள். அவர்கள் அந்த நாட்டின் தலித்துகளாகக் கருதப்படுகிறார்கள். பாகிஸ்தான், நேபாளம், பூடான், இலங்கை,மலேசியா போன்ற நாடுகளிலும் சாதி தனது வேர்களை பரவலாக பாய்ச்சியுள்ளது. ஆக,சாதி அமைப்பு இந்தியாவில் மட்டுமல்லாமல் தெற்காசியா முழுவதும் பரவலாக உள்ளது. இது பிரிட்டிஷ் காலனித்துவத்தின் விளைவாக ஏற்பட்ட பிரத்தியேகமான அமைப்பு இல்லை.ஆதிக்கவாதிகளின் கதைகளுக்கு முரணாக, இந்திய காலணிய அரசு உருவாவதற்கு முந்தைய தெற்காசிய வரலாறாகும்.
சாதி என்பது இந்து மதத்திற்கு மட்டுமே சொந்தமானது என்ற வாதமும் முழுக்க உண்மையுமல்ல.இந்து மதம், அதன் வேத சாஸ்திரங்களில், வர்ணாசிரமத்தின் மிக வலுவான கூறுகளைக் கொண்டுள்ளது என்பதை நான் புரிந்துகொண்டு ஒப்புக்கொள்கிறேன். ஆனால் சாதி என்பது பாரபட்சம் காட்டும் சடங்குகளும் நடைமுறைகளும் மிகப் பொதுவானதாக அனைத்து மதச் சமூகங்களிலும் வியாபித்திருக்கிறது. அதனால் தான் கேரளாவைச் சேர்ந்த சிரிய கிறிஸ்தவர்கள் பார்ப்பனர்களைப் போல நடந்து கொள்கிறார்கள், தலித் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள். இப்படிச் சொல்வதானால், இந்துத்துவவாதிகள் சாதி வெறியை மேலும் தூண்டிவிட்டு மீண்டும் சாதி அமைப்பை நிலைநாட்ட முயன்று வரும் சூழலை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.
சாதி அமைப்புக்கு எதிரான அணுகுமுறையானது அத்தீமையின் பன்முக பரிமாணங்களிலும் புரிந்து கொள்ள வேண்டும். புனிதம் , தீட்டு, இந்து மதம் ஆகியவற்றை எதிர்ப்பதே அவசியமான அணுகுமுறையாகும், என்பது ஒரு வகையான வரலாற்றுப் பார்வை. இப்பார்வையில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் நடப்பு சூழ்நிலையில் நாம் இங்கு பார்ப்பது, பல்வேறு சமூகப் பரிவர்த்தனைக்கு ஏற்றவாறு சாதி தனது கோரங்களை கட்டவிழ்த்து விடவும், மறைத்து வைக்கவும், மீண்டும் வெளிப்படுத்தவும் கூடிய ஒரு நெகிழ்வான அமைப்பாகும்.
எந்தவொரு குறிப்பிட்ட வரிசையிலும் இல்லாமல், சாதி அமைப்பில் 3 முக்கிய அம்சங்கள் உள்ளன:
முதலாவது, அகமணமுறை: ஒரே சாதிக்குள்ளேயே திருமணம்செய்துகொள்ளும் பழக்கம்.ஒரே சாதிக்குள்ளேயே திருமணங்கள் செய்வதை கட்டாயமாக்கி, பிறக்கும் போதே சாதி அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் ஒரு சாதிக் குழுவின் மக்கள்தொகையை ‘’தூய்மையாக’’ வைத்துக்கொள்ளும் உத்தியாகும். இந்த சாதி அடையாளங்கள் தொழில் மற்றும் உத்தியோகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இரண்டாவது, ஆணாதிக்கம்.ஆதிக்க சாதியிலும் ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களையும் அடிபணியச் செய்யும் உத்தி. ஆண்கள் தங்கள் சொந்த சாதிப் பெண்கள் மீதே ஆதிக்கம் செலுத்தி அடிபணியச் செய்வதுமாகும்.
மூன்றாவதாக, ஆண்டான் அடிமை ஆதிக்க மனப்பான்மை: தாழ்த்தப்பட்ட சாதியினர் அல்லது சாதிய அமைப்புக்கு வெளியே உள்ளவர் என முத்திரை குத்தப்பட்டவர்களை நேரடியாக தீண்டாமை உள்ளிட்ட தீவிரமான சமூக இழிவுக்கு உட்படுத்துவது. இதற்கு மாறாக, பார்ப்பனர்கள், சத்திரியர்கள் போன்ற ஆதிக்க சாதிக் குழுக்கள் ஆன்மீக ரீதியில் புனிதமானவர்களாகவும், தெய்வீகமானவர்களாகவும், தெய்வங்களால் நியமிக்கப்பட்ட தகுதியான சிந்தனையாளர்களாகவும் கருதப்படுகிறார்கள்.
சாதியைப் பற்றி பேசும் போது அண்ணல்அம்பேத்கர் குறிப்பிட்ட படிநிலை சமத்துவமின்மை என்ற கருத்து மிகவும் முக்கியமானதாகும்.ஏனெனில் சாதி என்பது ஒரு செங்குத்தான சமூகப் படிநிலைக்குள் உள்ள “0 மற்றும் 1” அல்லது இருகூறு அமைப்பு இல்லை. குறிப்பாக சாதிய அமைப்பு விஷத்தன்மையுடையது ஆகும்.ஏனென்றால் ஒவ்வொரு படிநிலைக் குழுவும் தங்கள் நிலையைத் தக்க வைத்துக் கொள்கிறது, அந்த சமூகத்தில் தங்கள் இடத்தின் எல்லைகளைப் தக்க வைத்துக் கொள்கிறது, தங்கள் சாதியைச் சேராத எவரையும் உதைத்து வெளியேற்றி விடுகிறது. அண்ணல் அம்பேத்கரும் பெரியாரும் சாதிய அமைப்பு பற்றி வலியுறுத்தும் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், வர்க்கம் தொழில் பிரிவுடன் தொடர்புடையது என்ற மார்க்சிஸ்ட் கருத்துகளுக்கு மாறாக சாதியமேதொழிலாளர் பிரிவுகளை உருவாக்கி காத்து வருகிறது என்பதாகும். தெற்காசிய வரலாற்று மற்றும் அரசியல் சூழலில், நீங்கள் ஒரு குறிப்பிட்ட வகையான தொழிலைச் செய்தால், ஒரு குறிப்பிட்ட வகையான வேலையைச் செய்தால், நீங்கள் ஒரு இழிவான மனிதனாகக் கருதப்படுவீர்கள்.
சாதியம் தொழில் சார்ந்த தொழிலாளர்கள் பிரிவினை (division of labourers) உருவாக்கி வைத்திருக்கிறது. உழைப்பைச் சுரண்டுதல் சாதியத்தின் ஒரு பகுதியே. அதனால் தான் காந்தி, "சிறந்த பாங்கி", மலம் அள்ளும் சிறந்த தொழிலாளி சமூகத்திற்கு இன்றியமையாத தனது வேலைகளைச் செய்ய வேண்டும் என்று கூறினார், இது நரேந்திர மோடியின் உரையிலும் பிரதிபலிக்கிறது. ஆக சாதிய அமைப்புக்கான ஆதரவு பிரச்சாரம் காந்தியிலிருந்து சமீபத்திய மோடி வரையிலானவர்கள் வரை ஒரு கோட்டில் உள்ளது.
கதீஜா: கார்னெல் டெக்னியன்னில்இருந்து என்னை நீக்கிய சவர்ண அடிப்படையில் பதவி பெற்றப் பேராசிரியரான தபன் பரிக்கை நான் எப்போதும் நினைத்துப் பார்ப்பேன்.1 ஒரு நாள், "வெள்ளையர்கள் 400 ஆண்டுகளாக இந்த ஒடுக்கப்பட்ட அசிங்கத்தில் இருந்திருக்கிறார்கள், ஒரு கட்டுப்பாடான சமூகத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது அவர்களுக்கு உண்மையில் புரியவில்லை" என்ற ரீதியில் ஒன்றைச் சொன்னார். இந்தியாவில், அனைத்து சூழல்களுக்கும் பொருந்தக்கூடியமிக, மிக உயரிய அமைப்பான சாதீயப் பிரிவுகள் இருந்து வந்துள்ளன.அதில் அவரவர் இடம் அவரவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.இந்த வகையான சமூக பிரிவுகள் சமத்துவமானதா இல்லையா என்பது குறித்து நீங்கள் ஒரு கருத்து கொண்டிருக்கலாம்.ஆனால் இது ஏதோ ஒரு வகையில் தகுதி அடிப்படையிலானது என்று கூறும் இந்த வெள்ளையர்கள் வைத்திருக்கும் ஒரு பொதுவான கதையை யாரும் நம்பக்கூட மாட்டார்கள். வெள்ளையர்களின் ஆதிக்கம் இந்தியாவைப் போல நேர்த்தியான சமூக நடைமுறைகளையும் வகைப்பாடுகளையும் கொண்டிருக்கவில்லை. இந்த உரையாடலில், அவர் மார்க்சியம் மட்டும் தான் பொருளாதாரத்தை அடித்தளமாகக் கொண்ட சமூக வகைப்பாட்டின் துல்லியமான கோட்பாடாகும் என்று கதா காலட்சேபம் செய்தார்.
முரளி: மார்க்சியத்துக்கும் சாதி ஒழிப்புக்கும் உள்ள கருத்தாக்க முரண் மிக விசித்திரமானது. உதாரணமாக உள்கட்டமைப்பும் தொழில்நுட்பமும், சாலைகளும், தகவல் தொடர்பும் வளர்ந்த பின்னர் சாதிய அமைப்பு அழியத் தொடங்கும் என்று கார்ல் மார்க்ஸ் (குறைத்து) மதிப்பிட்டு எழுதினார். மேற்கத்திய மார்க்சியம் (இந்தியாவில் புழங்கும் மார்க்சியம் உள்பட -சமீபத்திய சாதி குறித்த விழிப்புணர்வு மீறலாக) தெற்காசியாவில் நிலவும் சூழ்நிலைகளைப் புரிந்துகொள்வதில் உள்ள உண்மையான சிக்கல் என்னவென்றால், சாதியால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் எதிர்காலத்தை அது துல்லியமாக கணிக்கவில்லை என்பதேயாகும். மார்க்சியம் குறிப்பாக தெற்காசியாவில் பயனளிக்காது, ஏனெனில் வேலை வர்க்கத்துடன் தொடர்புடையது அல்ல என்பதே முதன்மையான காரணமாகும். இங்கு இருப்பது தொழிலாளர்களின் பிரிவு, உழைப்புப் பிரிவு அல்ல. இது சமூகவியல் ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் வேறுபட்டதாகும்.
இந்திய மார்க்சிஸ்ட் கட்சி இயக்கத்தைப் பார்த்தீர்களேயானால், சாதி மற்றும் பாலின வகையில் சமூக சலுகை பெற்ற, ஆதிக்க சாதிப் பின்னணியைச் சேர்ந்தவர்களால் அது வழி நடத்தப்படுகிறது. சொல்லப்போனால், அம்பேத்கரின் சாதி எதிர்ப்புப் போராட்டத்தை, “தளையற்ற சுதந்திரம் என்ற நோக்கத்திலிருந்து, அரிஜனங்களின் மேம்பாட்டிற்கான சாதாரண நோக்கத்தை நோக்கி மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்கு வழிகாட்டியது” என்று விமர்சித்தவர் கேரளாவைச் சேர்ந்த மார்க்சிய அறிவுஜீவி ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட். வங்க இனக்குழுவில் பத்ரலோக் என்ற சொல் புழக்கத்தில் உள்ளது.இது மேற்கு வங்கத்தில் உள்ள உயர் நடுத்தர வர்க்க மற்றும் ஆதிக்க சாதி பார்ப்பனர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும். மேலும், நீங்கள் மேற்கு வங்க இலக்கியத்தைப் பார்த்தீர்களேயானால், அவை பெரும்பாலும் மார்க்சிஸ்ட் பார்ப்பனர்களால் எழுதப்பட்டதாகும்.இன்று வரை மார்க்சிஸ்ட் கட்சியைப் பெரும்பாலும் பார்ப்பனர்கள் கட்டுப்படுத்தும் சூழல் தான் இந்தியாவில் நிலவுகிறது.
கதீஜா: மாவோவின் தலைமையிலான சைனீஸ் கம்யூனிஸ்ட் பார்ட்டியின் மத்தியக் குழுவிலும் இதே நிலைதான் இருந்தது.இதில் பெரும்பான்மையாக ஹான் இனத்தவர் தான் இடம் பெற்றிருந்தார்கள், என்றபோதும் சீனாவில் உள்ள மற்ற தேசிய இனத்தவரைச் சேர்த்துக் கொள்ளமாட்டோம் என ஒருபோதும் வெளிப்படையாகக் கூறியதில்லை. எத்தியோப்பியாவில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சிகளின் மத்திய குழுக்களைப் பற்றி யோசித்துப் பார்த்தால், பெரும்பாலும் அபிசீனியர்கள் தான் இருந்தார்கள்.
முரளி: அதனால் தான் யாரேனும் என்னிடம் அவர்கள் ஒரு மார்க்சிஸ்ட் என்று கூறினால், அவர்களை நம்புவதற்கு முன்னர் அவர்களின் அரசியல் மற்றும் சமூக அடையாளத்தைப் பற்றி விவரமாகத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. தெற்காசியச் சமூகத்தில் மார்க்சியம் என்பது ஒரு வகையான சலுகை தவிர, அது அம்பேத்கரியம், பெரியாரியம் இயக்கங்களுக்கு நிகரான முறையாக இல்லை என்று நான் நினைக்கிறேன்.
கதீஜா: இந்தியர்களுக்கு சமூகப் பிரிவு என்ற கட்டுப்பாடு இருக்கிறது என்பதையும், அதன் தொடர்ச்சியாக, சிலிக்கான் பள்ளத்தாக்கில் வெளிப்படையாக நடைமுறைப்படுத்தாமல் சாதி எவ்வாறு மையமாக உள்ளது என்ற கருத்தைக் குறித்தும் நான் நிறைய யோசித்து வருகிறேன். இந்தத் தொடர்புகளைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாகக் கூற முடியுமா?
முரளி: தெற்காசியாவில் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருக்கும் நிலை சிலிக்கான் பள்ளத்தாக்கிலும் உருவாக்கப்படுகிறது. இது சாதிய அமைப்பின் இயல்பானவிளைவாகும். ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
முதலாவதாக, தென்னிந்தியப் பார்ப்பனர்கள், அமெரிக்காவில் வேலை செய்யும் தங்கள் உறவினர்கள் மற்றும் மூலதனம் ஆகிய தொடர்பின் மூலம் அங்கு குடிபெயரத் தொடங்கினார்கள். இரண்டாவதாக, இந்தியாவின் ஆட்சிப் பணியாளர் ஏஜென்சியுடனான அவர்களது தொடர்பு, எளிதாக அமெரிக்காவிற்கு இடம்பெயர்வதற்கு உதவியது. அமெரிக்காவில் ஓரிரு தலைமுறைகளாக வாழும் தென்னிந்திய ஆதிக்க சாதியைச் சேர்ந்தவராக இருக்கக்கூடிய ஒருவரிடம் நீங்கள் உரையாடினால், அவர்கள், “என் தாத்தா பிரிட்டிஷ் அரசாங்கத்திற்காக வேலை செய்து கொண்டிருந்தார்” என்று கூறுவதற்கான சாத்தியம் இருக்கிறது. வழி வழியாக வரும் சமூக மூலதனம் ஒரு இயல்பான தகுதி போல விவரிக்கப்படுகிறது.
நான் பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் பி.எச்.டி செய்துகொண்டிருந்த தீவிர தமிழ் பார்ப்பனப் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் நான் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுவிட்டு, என்னிடம், “அடடா, நீ தமிழ் அரசியல்வாதி மாதிரியே பேசுகிறாய். லண்டனில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? ஏன் நீ தாய்நாட்டிற்குச் சென்று சீர்திருத்தம் செய்யக்கூடாது? " என்று கேட்டார். பதிலுக்கு, "அப்படியானால் நீ இங்கே என்ன செய்கிறாய்?" என்று நான் கேட்டேன். அதற்கு அவள், "என்னால் உனக்கு உதவ முடியும் (அங்கிருந்தே உன் வேலையைச் செய்வதற்கு)" என்று பதிலளித்தாள். இங்குசாதி எவ்வாறு இயங்குகிறது என்பதை நீ பார்க்கிறாய், “நீ தாய் நாட்டிற்கு திரும்பிச் சென்றுவிடு. நான் இருக்கும் இடத்தில் நான் வசதியாக இருப்பதால் நான் இங்கேயே இருப்பேன்." இது, சமகாலத்தில் புலம்பெயர்ந்தவர்களின் சாதி அரசியலை விளக்கும் ஒரு உதாரணமாகும். தலித்துகளும், சூத்திரர்களும் சமமான நிலையை எட்டும் போது, பார்ப்பனர்கள் பதவிகளைப் பெறுவதற்கு உதவும் உயர் அதிகாரத்தையும் அதற்குத் துணைபோகும் தொடர்புகளையும் அவர்கள் மறைமுகமாக வைத்துக்கொள்ளும் தந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துகிறார்கள்.
தமிழ்நாட்டின் ஆண்டிபட்டியில் தலித்துகளால் நடத்தப்பட்ட சாதி எதிர்ப்புப் போராட்டம்
கதீஜா: தொழில்நுட்ப-தீர்வுவாதம் என்பதிலிருந்து இந்த இயந்திரங்கள் சமூக-தொழில்நுட்ப அமைப்புகள் என்று வலியுறுத்தும் இடத்திற்கு நகர்ந்திருக்கிறது. இந்த நகர்வு, நாமிருக்கும் இந்த இடத்தில் சமூகம் என்பதை எப்படி வரையறுக்கிறோம் என்பதைத் தெளிவுபடுத்தும் விவாதத்துடன் இணைக்கப்படவில்லை. சாதியை விமர்சிக்கும் அணுகுமுறை அதைப் பற்றி என்ன கூறுகிறது?
முரளி: நான் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட உதாரணம் தருகிறேன். "pariah" (பறையர்)என்ற சொல் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் மற்றும் பிற ஆங்கில அகராதிகளில் பதிப்பிக்கப்பட்ட போது, அச்சொல்லின் உரிப்பொருள் மறைக்கப்பட்டு அது சலவை செய்யப்பட்ட சாதிய அரசியல் கலக்காத பொதுவான – ஆங்கில – வார்த்தையாக பதிப்பிக்கப்பட்டது. Pariah என்ற ‘’ஆங்கிலச்சொல்’’ பறையர் என்ற சொல்லிலிருந்து வந்தது.அதன் உரிப்பொருள் தமிழில் இருந்து வந்ததாகும். பறையர் என்றால் பறை. நான் ஒருவரை தமிழில் “ஏய் பறையா” என்று அழைத்தால், அது சாதி இழிவாகவே கருதப்படும். இது மிகவும் அவமானகரமானது; மனிதாபிமானமற்றது.
அந்த வார்த்தைக்கு இப்போது என்ன நேர்ந்தது? ஆங்கிலேயர்கள் சாதி அமைப்பை மறுசீரமைத்தபோது, பறையர் என்பது "யாரோ ஒதுக்கப்பட்டவர்" என்பதற்கான பொதுவான அடையாளக் குறியீடாகப் புரிந்து கொண்டனர். அதனால் இப்போது, இங்கிலாந்தில் உள்ள ஊடகங்கள் உக்ரைன் ஒரு "பரியா நாடு" என்று கூறுகின்றன. கல்வியாளர் மத்தியில்ஹன்னா அரெண்ட், யூதர்கள் பறையர்கள் என்று ஒரு கோட்பாட்டை முன்வைத்து யூதர்களின் உரிமைக்காக வாதிட்டார். இதற்கு முன்பாகவே, சமூகவியலாளர் மேக்ஸ் வெபர், நவீன ஊடகங்களில் பத்திரிக்கையாளர்களின் நிலையைக் குறிப்பிடுகையில் (மேற்குலக) "பத்திரிகையாளர்கள் ஒரு வகையான பரியா சாதி" என்று எழுதினார். மேற்கத்திய கல்விசார் உலகில் பறையர் சொல் அதன் உரிச்சொல்லின் சாதியத் தோற்றத்துடன் தொடர்பற்று இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட வழக்கு முறைகள் சாதிய வன்முறையைத் தடுக்கும் முயற்சிக்கு எதிரானதாகத் திரும்பி விட்டது. உதாரணமாக சமூக வலைத்தளங்கள் தங்கள் பயனர்களின் பேச்சுகளை கண்காணித்து வருகிறது. நிற, இன, பாலின பேத வெறுப்புப் பேச்சுகளை கணினியின் உதவியோடு கோர்த்தும், பட்டியலிட்டும் அவற்றை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கின்றன. உதாரணமாக கறுப்பின மக்களை நிற பேத அடிப்படையில் வசை பாடினால் (N...R) கணினி அந்த சொல்லை அடையாளம் கொண்டு பயனர்களுக்கு புகார் கொண்டு செல்லும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.
ஆனால் இந்த விதி, ‘’பரியா’’, பறையர் போன்ற வார்த்தைகளுக்கு பொருந்தாது. இன்று, ஒரு ஆதிக்க சாதிக்காரர் ஆன்லைனில் ஒருவரிடம்,"... வாயை மூடுடா பறப்பயலே" என்று சொல்ல முடியும். இதனால் பாதிக்கப்பட்டவர் சமூக ஊடக தளத்திற்குச் சென்று, “எனக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது, யாரோ ஒருவர் என்னை பறப்பயலே என்று அழைத்தார், பாருங்கள்” என்று சொன்னால், “அதனால் என்ன? இதில் எந்தத் தவறும் இல்லையே, இது ஆங்கில அகராதியில் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர் என்ற அரசியல் ரீதியான சாதாரண வார்த்தை தான்." என்று தான் பதில் வரும். எனவே, மிக இயல்பாகவும், மிகக் கடுமையாகவும் புழங்கக்கூடியதாகிவிட்டது, மேலும், சொரணையின்றி சாதியைப் பற்றி பேசுவதே டிஜிட்டல் கலாச்சாரமாக இருக்கிறது. தலித்துகளும் ஒடுக்கப்பட்ட சாதியினரும் அவர்களை மட்டுமே குறிவைத்து செய்யப்படும் அவமானத்தாலும் எல்லை மீறிய வார்த்தைகளாலும் பாதிக்கப்படுகின்றனர்.ஆனால் இதற்கு எதிராக டிஜிட்டல் அல்லது வெளி உலகில் சொற்பமான பாதுகாப்புகளே வழங்கப்படுகின்றன.
கதீஜா: முன்கணிப்பு தொழில்நுட்பம் (Predictive Technology) இப்படிப்பட்ட குறைகளை நீக்க முடியுமா?
முரளி: முன்கணிப்பு கருவிகள் அடிப்படையில் சார்புடையவையாகவே இருக்கும். நீங்கள் எதை கணிக்க முயற்சிக்கிறீர்கள்? நீங்கள் என்ன விளைவுகளைப் பெறுவதற்காக நம்பிக்கை கொண்டுள்ளீர்கள்? இந்தக் கேள்வியே சமூகச் சார்புகளைக் கொண்டுள்ளது. பணக்காரர்கள் ஏன் தீயவர்களாக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் கணிக்க முயற்சிக்க மாட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியும், இல்லையா?
கதீஜா:இந்த கேள்வி முக்கியமானது.
முரளி: அவர்கள் அதைக் கணிக்கப் போவதில்லை. அமைப்பிற்கு யார் குடைச்சல் கொடுக்கிறார்கள் என்பதைத் தான் அவர்கள் கணிப்பார்கள். அமைப்பிற்கு குடைச்சல் கொடுக்கும் மக்களைப் பற்றிய இந்த இனவாதக் கருத்தே ஒரு சார்புடைய கேள்விதான். எனவே நாம் ஒரு படி பின் சென்று யோசிக்க வேண்டும். முன்கணிப்பு கருவிகள் என்பது ஏதோ புதிதல்ல, குறிப்பாக சாதிய அமைப்பிலிருந்து வரும் என்னைப் போன்றவர்களுக்கு புதிதல்ல.நான் வளரும் காலத்தில், என் அப்பா தனது சம்பளத்தை மாதத்தின் முதல் நாளில் வீட்டிற்கு கொண்டு வருவார், அது பதினைந்தாவது நாளில் முடிந்து விடும், பின்னர் நாங்கள் கடன் வாங்கித்தான் ஓட்ட வேண்டியிருந்தது. இந்த நிலையே தொடரும். பொருட்களைக் கடனில் வாங்குவதற்காக, என் அம்மா மளிகைக் கடைக்குச் செல்ல வேண்டும் அல்லது எங்களை அனுப்புவார். ஒரு வார காலத்திற்குள் திருப்பிச் செலுத்திவிடுவோம் என்று அவர் எப்போதும் உறுதியளிப்பார். திரும்பத் திரும்ப, மளிகைக் கடைக்காரர்கள், “இல்லை, இதற்கு மேல் நாங்கள் உங்களுக்கு கடன் தரமாட்டோம். நீங்கள் அதற்குத் தகுதியானவர்கள் இல்லை" என்பார்கள். அது ஒரு முன்கணிப்பு கருவியாகும். எங்களுக்கு கொடுக்கப்பட்டக் கடனை நாங்கள் முறையாக சரியான நேரத்தில் திருப்பிக் கொடுத்த போதிலும், எங்கள் சாதியின் படிநிலை காரணமாக எங்கள் குடும்பத்தை தகுதியற்றவர்கள் என்று வகைப்படுத்தும் அது ஒரு முன்கணிப்பு கருவியாகும். அதனால் என் அம்மா ஒவ்வொரு முறையும் இரைஞ்ச வேண்டியிருந்தது, அது அவமானமாக இருந்தது.முன்கணிப்பு கருவிகள் மிகவும் சமூகச் சார்புடைய ஆணாதிக்க அமைப்பாகும். அதில் நடுநிலை என்று எதுவும் இல்லை.
கதீஜா: நீங்கள் டேட்டா & சொசைட்டியில் இருந்த போது, சாதிக்கும் தொழில்நுட்ப அரசியலுக்கும் உள்ள உறவினைப்பற்றி ஒரு பாடத்திட்டம் உருவாக்கி உள்ளீர்கள். தொழில்நுட்பத்தின் வழியே சிந்திக்கும் போது, ஒரு சாதியின் மீதான விமர்சனப் பார்வைக்கு நமக்கு என்ன தேவை என்பதைப் பற்றி மேலும் கூற முடியுமா?
முரளி: "சோசலிஸ்ட்" என்று பரவலாகக் கருதப்படும் இந்தியாவின் முதல் பிரதம மந்திரியை மேற்கோள் காட்டி நான் தொடங்குகிறேன். அவர் ஜவஹர்லால் நேரு என்ற காஷ்மீரி பண்டிட் (பிராமண) அறிஞர் ஆவார். இந்தியாவில் பல நல்ல விஷயங்களுக்கு அவர் காரணமாக இருந்தார், அதை நான் மறுக்கப் போவதில்லை. ஆனால், "அணைகள் இந்தியாவின் நவீன கோவில்களாகும்" என்ற அவரின் சுவாரஸ்யமானக் கூற்றை நான் திரும்பத் திரும்ப யோசித்துப் பார்க்கிறேன். அதற்கு என்ன பொருள்? இந்தியக் கோயில்கள் எல்லோருக்குமானவை அல்ல, அணைகளும் எல்லோருக்குமானவை அல்ல. சாதியக் கருத்துகள் வரலாற்று ஒப்புமைகளிலும் உருவகங்களிலும் அடிக்கடி வெளிப்படுகின்றன. முதலில் தொழில்நுட்பங்களை உருவாக்கியவர்கள் யார் என்று பார்த்தால், பெரும்பாலும் தலித்துகளும் ஒடுக்கப்பட்ட சாதிக் குழுக்களாகவும் தான் இருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் தான் உழைப்பவர்களாக இருந்தார்கள். அவர்கள் உழைப்பவர்கள், விவசாயிகள், மரபியல் வல்லுநர்கள், அவர்கள் தான் உண்மையில் அணைகளைக் கட்டியவர்கள். அந்த மக்கள் தான் துணி நெய்தல் என எல்லாவற்றையும் செய்பவர்களாக இருந்தார்கள். ஆனால் இந்தியச் சுதந்திரம், காலனித்துவ எதிர்ப்பு இயக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய வழக்கமான வரலாற்றுப் பதிவுகளால் அது முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. இதற்கிடையில், "ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதுவும் தெரியாது" என்று ஆதிக்க சாதியினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். எனவே, இங்கே கொன்று புதைக்கப்பட்ட வாதங்களுக்கு உயிரூட்டுவதே எனது தேடலாகும். உண்மை என்னவென்றால், நீண்ட காலமாக நாம் தொழில்நுட்பத்தின் பொறுப்பாளர்களாகவும், பாதுகாவலர்களாகவும் இருந்து வருகிறோம். ஆனால் இப்போது, முழுக் கதையும் முற்றிலுமாகத் திரிக்கப்பட்டு விட்டது.
கதீஜா: ஒதுக்கப்பட்ட பகுதியான நவாஜோவில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யப்படுவது பற்றிய லிசா நகமுராவின் கட்டுரையில், ஒதுக்கப்பட்ட அந்தப் பகுதியை உற்பத்தி செய்வதற்கு ஃபேர்சைல்ட் ஃபேக்டரி தேர்ந்தெடுப்பதற்கு மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் கொடுப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்ததும் ஒரு காரணமாக இருந்தது என்பதை அவர் வலியுறுத்துகிறார். அத்துடன், உள்நாட்டுக் கைவினைஞர்களும், நெசவாளர்களும் டிரான்சிஸ்டர் அல்லது செமிகண்டக்டர் உருவாக்குவதற்கு தேவையான நுணுக்கங்களில் கவனமாக இருந்தார்கள் என்பதையும் கண்களால் பார்த்தே அதன் துல்லியத்தை தெரிந்துகொள்ளும் நிபுணத்துவமும் பெற்றிருந்தார்கள் என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.
முரளி: இந்தியாவில் 1,00,000க்கும் மேற்பட்ட அரிசி வகைகள் இருந்தன. அவைகளை கட்டி காத்தவர்கள் பூர்வகுடிகளே.அவை அனைத்தையும் பெயரிட்டு மரபணு ரீதியாக பூர்வகுடிகளும், தலித்துகளும் பாதுகாத்து வைத்திருந்தார்கள்.அறிவு மிகுந்த பார்ப்பனர்கள்என்று சொல்லிக்கொள்பவர்களின் அறிவியல் சாதனை எதனோடும் இதை ஒப்பிட முடியுமா? இப்போது நம்மிடம் 6,000 வகைகள் மட்டுமே உள்ளன. இந்த உதாரணத்தைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு வியப்பாக இருக்கிறது. தலித்துகளும், பூர்வகுடிகளும் பல நூற்றாண்டுகளாக மரபணுக்களை சேமித்து வைத்திருந்திருந்தனர். அந்த உண்மையை மீண்டும் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்!
கதீஜா: இனவாதமும் சாதியமும் வேறு, வேறாக இருந்தாலும் இரண்டிற்குமான தொடர்பை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
முரளி: அனைத்து ஒடுக்கப்பட்ட குழுக்களும் தவிர்க்க முடியாத, இயற்கையாகவும் தன்னிச்சையாகவும் உருவான ஒரு ஒற்றுமைப் பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளார்கள் என நான் நினைக்கிறேன். இனம் மற்றும் சாதியின் அடிப்படையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் சவால்களையும் தொடர்புபடுத்திப் பார்ப்பது இயல்பானது தான். உதாரணத்திற்கு, நான் அவமானப்படுத்தப்பட்டேன். சாதியின் அடிப்படையில் நான் அவமதிக்கப்பட்டேன், தண்டிக்கப்பட்டேன். கறுப்பின மக்களும் இனத்தின் அடிப்படையில் அவமானப்படுத்தப்பட்டார்கள், அவமதிக்கப்பட்டார்கள், தண்டிக்கப்பட்டார்கள். அதன் விளைவாக ஏற்படும் சவால்கள் இருவருக்கும் ஒன்றாக இருக்கும்போது, அந்த ஒற்றுமைப் பாலம் எங்களை இணைக்கும். நாங்கள் இணைந்து செயல்படலாம். நீங்கள் தண்டனைக்கு ஆளாகியுள்ளீர்களா? நான் தண்டிக்கப்பட்டுள்ளேன். நாம் எப்படி ஒன்றிணைந்து செயல்படுவது? இருப்பினும், மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. கறுப்பின மக்களுக்கும், தலித்துகளுக்குமான தூண்டுதல்கள் வேறு வேறானவையாகும். நம்மைத் தாழ்த்துவதற்கு தூண்டுதலாக இருப்பது எது? இது மிகவும் தனித்துவமானதும்மற்றவைகளிலிருந்து வேறுபட்டதும்விதிவிலக்கானதுமாகும். அதற்கென தனித்த வரலாறும் சமூகவியலும் அரசியல் சிக்கல்களும் வர்க்க மற்றும் பாலின சிக்கல்களும் உள்ளன. ஆகையினால், நான் ஒரு கறுப்பினத்தவரிடம், "நம் இருவருக்கும் ஒரே மாதிரியான பிரச்சனை உள்ளது" என்று ஒரு போதும் சொல்ல முடியாது எனக் கருதுகிறேன். ஆனால் பிரச்சனையின் விளைவால் நமக்கு ஏற்படும் சவால்கள் ஒரே மாதிரியானது என்று சொல்லலாம். நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம். ஆனால், நீங்கள் உண்மையில் தினசரி என்ன விதமான அவமானங்களை எதிர்கொள்கிறீர்கள் என்று எனக்குத் தெரியுமா? அரசியல் ரீதியாக நான் வந்து சேர்ந்திருக்கும் இடத்திற்கு நீங்களும் வந்திருப்பதற்கு உங்களுக்கு எது தூண்டுதலாக இருந்தது என்பது எனக்குத் தெரியுமா? எனக்குத் தெரியாது.
துரதிர்ஷ்டவசமாக, இசபெல் வில்கர்சனின் புத்தகம் [காஸ்ட்: தி ஆரிஜின்ஸ் ஆஃப் அவர் டிஸ்கன்டன்ட்ஸ்] இனவாதத்தையும் சாதியத்தையும் சமமாக வைத்துப் பார்க்கிறது. ‘சாதியை உயர் மட்டத்தில் வைத்து, அதற்கு கீழ் இனவாதம், இனப்படுகொலை, பிறகு இந்தியா இருக்கிறது’ என்பது போன்ற ஒருவிதமான ஏணிப் படிகள் போல எல்லாவற்றையும் அவர் அடக்கி விடுகிறார். நான் இசபெல்லாவின் கருத்துகளை நிராகரிக்கவில்லை, ஆனால் என் சக மனிதர்களின் துயரம், அவமானம், சிரமங்கள் ஆகியவற்றை நான் மதிக்கிறேன். ஆனால் ஒடுக்கப்பட்ட தலித், சூத்திர, ஆதிவாசி சகோதரிகளைப் போன்றவர்களின் அனுபவங்களும் எனது அனுபவமும் ஒன்று என்று நான் கூற முடியாது. அதில் நான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், அனுபவ ரீதியாக நாங்கள் ஒரே பொதுவான தளத்தில் இருக்கிறோம் என்பதை நான் முழுமையாக புரிந்துகொள்கிறேன். நாம் அனைவரும் அவமானப்படுத்தப்பட்டுள்ளோம். நாம் அனைவரும் அவமதிக்கப்பட்டுள்ளோம்.நம்மில் சிலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். நமக்கு இருக்கும் பொதுவான சவால்களைப் புரிந்துகொண்டு நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஒடுக்குமுறை சக்திகளுக்கு எதிராகப் போராடுவதற்கு ஒன்றிணைந்து செயல்படும் அதேவேளையில் நம் ஒவ்வொருவரின் முக்கியமான தனித்துவமான தூண்டுதல்களை அவமதிக்காமல் இருப்பது அவசியமானதாகும். அதுவே மரியாதைக்குரியதாக இருக்கும். (உணர்ச்சிவசப்படுகிறார்)
கதீஜா: ஒரு நிமிடம் எடுத்துக் கொண்டு ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள். நன்றி! ஏனென்றால் ஒற்றுமையாக இருப்பதற்கு பாதிக்கப்பட்டிருப்பது அவசியமாகிறது. ஒரு எச்சரிக்கை உள்ளது: வெவ்வேறு இனங்கள் ஒன்றுபடுவதை சரி அல்லது தவறு என நாம் வாதிட்டாலும், அநீதிக்கு உள்ளானது உண்மையாக இருந்தால் அது நிச்சயம் சாத்தியமாகும்.
முரளி: நாம் இருவரும் செயல்படும் விதமும், கலந்துரையாடும் விதமும், ஒருவரை ஒருவர் எப்படி மரியாதையுடன் நடத்துவது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நாம் இருவரும் ஒற்றுமையாக இருப்பதற்கு ஒரு பொதுவான பாலம் உள்ளது. ஆனால் எனக்கு எவை தூண்டுதல்களாக இருந்ததோ அதை நீங்களும், உங்களுக்கு எவை தூண்டுதல்களாக இருந்ததோ அதை நானும் சிறுமைப்படுத்தவில்லை. நான் அனுபவித்தவற்றை நீங்களும், நீங்கள் அனுபவித்தவற்றை நானும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. என் மனைவியிடம் சென்று, கதீஜா என்ன மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கிறாள் என்பது எனக்குத் தெரியும் என்று சாதாரணமாக சொல்லிவிட முடியாது. அது முட்டாள்தனமானதாகும். ஆனால், நாம் ஒன்றிணைந்து இருப்பதற்கான காரணம் எனக்குத் தெரியும். ஒருவரை ஒருவர் மதிப்பதற்கு இதுவே சரியான உதாரணமாகும். ஒருவருக்கொருவர் துணையாகவும் ஆதரவாகவும் இருக்கிறோம்.
1. திருத்தம், ஜூன் 22, 2023:லாஜிக்ஸ் முதலில் தபன் பாரீக்கின் சாதி தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. டாக்டர். பரிக், ஜூன் 16 ஆம் தேதி தனது மீடியம் போஸ்ட்டில், அவர் பனியா சாதியைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டிருந்தார், பின்னர் பனியா என்ற சொல்லை வைஷ்யா என்ற சொல்லாக மாற்றினார். எது உண்மை என்பதை அறிந்துகொள்வதற்கு நாங்கள் மேற்கொண்ட முயற்சிக்கு பதிலளிக்கும் வகையில் எந்தக் கருத்தையும் சொல்வதற்கு டாக்டர். பரிக் விரும்பவில்லை.
சாதிக் கொடுமைகளால் நேரடியாக பாதிக்கப்பட்ட முரளி சண்முகவேலன் சாதிக்கு எதிரான அறிஞர் ஆவார். அவருடைய ஆராய்ச்சியானது ஊடகங்களிலும் தகவல்தொடர்பு ஆய்வுகளிலும் டிஜிட்டல் கலாச்சாரத் தளங்களிலும் பொறுப்பேற்க மறுக்கப்படும், குறிப்பாக சாதிக் கொடுமைகள் போன்ற பாதுகாக்கப்பட்ட வகைகள் தொடர்பான சிக்கல்கள் பற்றியதாகும்.
ஆசிரியர் குறிப்பு
ஜே. கதீஜா அப்துல்ரஹ்மான் லாஜிக்(ஸ்)ஸின் ஆசிரியர் ஆவார். ஜார்ஜ்டவுன் சட்ட மையத்தின் சிறப்பு உறுப்பினராக இருக்கிறார். ஏஐநௌஇன்ஸ்டிட்யூட் மற்றும் UCLA வின்சென்டர் ஃபார் கிரிட்டிகல் இன்டர்நெட் இன்கொய்ரியின் முந்நாள் உறுப்பினர். கொலம்பியா பல்கலைக்கழகத்தின் இன்சைட் இன்ஸ்டிட்யூட்டில் வீ பி இமேஜினிங் நிறுவனத்தை நிறுவியவர். தி யுனிவர்சிட்டி ஆஃப் வாஷிங்டன், எச்சிடிஇ துறையுடன் இணைந்து தி அதர்வைஸ் ஸ்கூலை நிறுவினார். மிக சமீபத்திய வெளியீடுகளில் கொலம்பியா ரேஸ் லா ஜர்னல், தி ஃபுனாம்புலிஸ்ட் மற்றும் பராபிராக்ஸிஸ் ஆகியவை அடங்கும். கதீஜாவின் ஆராய்ச்சி அமெரிக்க குடும்பக் காவல் துறை மற்றும் ஹார்ன் ஆஃப் ஆப்பிரிக்காவின் தொழில்நுட்பத்திற்குள்ளான முன்கணிப்பு அபாய மாடலிங்கில் கவனம் செலுத்துகிறது.