உங்களுக்கு ஒரு எதிரி இருந்தால், அவருக்கு ஒரு கார் வாங்கிக் கொடுக்கவும்: இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களை எதிர்கொள்ளும் கிக் தொழிலாளர்கள்

Agnee Ghosh

The English version of this piece is available here. Translation by Jayachandran Masilamani.

அக்னி கோஷ்

மொழிபெயர்ப்பாளர்: ஜெயசந்திரன் மாசிலாமணி, ஃப்ரீலான்ஸர்

குறிப்பு: ஃப்ரீலான்ஸர்கள், தற்காலிக பணியாளர்கள், சுயாதீன தொழிலாளர்கள், பிளாட்ஃபார்ம் (இணைய வழி செயலிகள்) தொழிலாளர்கள் போன்ற முறைசாரா தொழிலாளர்களை ஆங்கிலத்தில் “Gig workers” என்றும் அது சார்ந்த பொருளாதாரத்தை “Gig Economy” என்றும் குறிப்பிடுகிறார்கள். இங்கே புரிதலுக்காக “Gig workers” என்பதை இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் என்றும் “Gig Economy” என்பதை இணையம் சார்ந்த கிக் பொருளாதாரம் என்றும் குறிப்பிட்டுள்ளோம்.

ஆரம்ப வாக்குறுதி

இந்தியாவில் கொல்கத்தா நகரெங்கும் பெரிய விளம்பரப் பலகைகளிலும், பேருந்துகளின் பின்புறத்திலும் உபர் மற்றும் ஓலா நிறுவனங்கள் ஒட்டியிருந்த பெரிய விளம்பரங்களை ரமேஷ் பிரசாத் நினைவு கூர்ந்தார். 2015 ஆம் ஆண்டில் பிரசாத் காளிகாட்டில் உள்ள ஒரு குடும்பத்திற்கு ஓட்டுநராக இருந்தார். அவரைப் போன்ற பாட்டாளி மக்களுக்கு ஒரு நல்வாழ்வும் அதிக பணமும் கிடைப்பதற்கு உறுதியளிக்கும், நம்பமுடியாத விளம்பரங்களை அவர் பார்ப்பது வாடிக்கையாகிஇருந்தது.

“ஆனால் அந்த விளம்பரம் எனது சொந்தக் காரை ஓட்டுவதன் மூலம் நான் ஒவ்வொரு மாதமும் ரூ. 1 லட்சம் சம்பாதிக்க முடியும் என்று கூறியது! மேலும் எனது வேலை நேரத்தையும் என்னால் முடிவு செய்ய முடியும்,” என்கிறார் பிரசாத்.

அப்போது, அவர் மாதம் ரூ. 20,000 சம்பாதித்துக் கொண்டிருந்தார்.மேலும் இந்தியாவில் தனிநபர் வருமானம் ரூ.93,293 என மதிப்பிடப்பட்டிருந்தது. பிரசாத் தனது முந்தைய வேலையை விட்டுவிட்டு, கார் லோன் வாங்கி ரூ. 8 லட்சத்திற்கு ஒரு காரை வாங்கி, உபர் நிறுவனத்திற்கு ஓட்ட ஆரம்பித்தார். அவரது புதிய வேலை அவருக்கு வழங்கிய சுதந்திரம் தான் அவருக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. அவர் ஓட்ட விரும்பும் போது உபர் டெலிவரி செயலியை இயக்கலாம், அவர் ஓய்வெடுக்க விரும்பும் போது அதை அணைத்து வைக்கலாம்.

உறுதியளித்திருந்தபடியே 2015 இல் பிரசாத் ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் சம்பாதித்தார். கொல்கத்தாவில் நடுத்தர வர்க்கமும், பணக்காரக் குழந்தைகளும் படிக்கும் தனியார் ஆங்கிலப் பள்ளியான செயின்ட் சேவியர் பள்ளியில் அவர் தனது ஒரே மகனைச் சேர்த்தார். சாதிய மற்றும் வர்க்கப் படிநிலைகளால் கட்டமைக்கப்பட்ட ஒரு சமூகத்தில், இது போன்ற பள்ளியில் படிப்பதுவாழ்வில் முன்னேறுவதற்கான அரிய நம்பிக்கையை அளித்தது. ஒரு கணம், இந்த புதிய வேலை பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தின் வாழ்க்கைப் போக்கையே அர்த்தமுள்ளதாக மாற்றிவிடக் கூடியதாகத் தோன்றியது.

பிரசாத்திற்கு உபர் நிர்வாகத்தைப் பற்றி சிறு குறைகள் இருந்தபோதிலும் நல்ல வருமானம் கிடைப்பதால் அவற்றைப் புறக்கணித்தார். அவரைப் போன்றே கனவுகளுடன் உபரில் இணைந்த ஓட்டுநர்கள் காலப்போக்கில் அந்நிறுவனம் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை உணரத் தொடங்கினர்.

இணையம் சார்ந்த கிக் பணி: சாதி மற்றும் வர்க்கம்

பெங்களூர் மற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்களுடன் உரையாடியதில், இந்தியாவில் குறிப்பாக சாதி, வர்க்கம் மற்றும் குடியுரிமை நிலை என ஏற்கனவே ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வின் நிலையற்றத் தன்மையையும் பாதுகாப்பின்மையையும் இணையம் சார்ந்தகிக் பணி எவ்வாறு அதிகரிக்கிறது என்பதை ஆராய்ந்தேன். நான் சந்தித்த பெரும்பாலான இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் இதற்கு முன்பு தனிப்பட்ட ஓட்டுநர் போன்ற சில்லறை வேலைகள் செய்தவர்களாகவோ அல்லது வேலையில்லாமலோ இருந்தவர்கள்.தற்போது டெலிவரி டிரைவர்களாக உள்ளார்கள். மொழி, மதம், சாதி மற்றும் சமூகம் சார்ந்த வேறுபாடுகள் தொடர்பான பாரபட்சமான மனப்பான்மை காரணமாக பல தொழிலாளர்கள் தவறாகவும் மரியாதையை குறைவாகவும் நடத்தப்படுதை விவரித்தனர். அகில இந்திய இணையம் சார்ந்தகிக் தொழிலாளர்கள் சங்கத்தின் கர்நாடக ஒருங்கிணைப்பாளர் சுமன் தஸ்மஹாபத்ராவின் கூற்றுப்படி, பெங்களூரின் பெரும்பான்மையான இணையம் சார்ந்தகிக் தொழிலாளர்கள் மேற்கு வங்காளம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த வங்காளிகள் ஆவர். இந்தியாவில் உள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) காரணமாக அவர்கள் சட்டவிரோதமாக குடிபுகுந்த வங்காள தேசத்தவர்கள் என அடிக்கடி அநியாயமாக முத்திரை குத்தப்படுவதாக தஸ்மஹாபத்ரா கூறுகிறார். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவ்வப்போது பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர். சில சமயங்களில் அரசு ஒத்துழைப்புடன் பாகுபாடு காட்டப்படுகிறது.

வீட்டு வேலைத் தொழிலில் வியாபித்திருக்கும் பல்வேறு சாதிய ஒடுக்குமுறைகளும் வர்க்க பேதங்களும் இணையம் சார்ந்தகிக் தொழிலாளர்களின் நிலைமையைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. இன்றைய காலகட்டத்திலும் இந்திய சமூகத்தில் வேரூன்றி இருக்கும் அம்சமான இந்து சாதி அமைப்பு வர்ணாசிரம படிநிலையை விவரிக்கிறது: பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள். பெரும்பாலும் "தீண்டத்தகாதவர்கள்" என்று அழைக்கப்படும் தலித்துகள், வரலாற்று ரீதியாக இந்து சமுதாயத்தில் மிகவும் தாழ்ந்த பிரிவினர்களாகக் கருதப்படுகிறார்கள். சாதி அமைப்பு பிற்போக்கானது என்பதுடன் அநீதியானது என்று எல்லோராலும் சாடப்பட்டாலும், இந்த அமைப்பு பல நூற்றாண்டுகளாக பெரிய அளவில் மாறாமல் உள்ளது. இது தனிநபர்களை கடுமையான சமூக வர்க்கக் கட்டமைப்புகளுக்குள் ஒடுக்கி வைத்துள்ளது.

நவீன இந்தியாவில், உழைக்கும் வர்க்க மக்கள்மீதான அலட்சியமான மனப்பான்மை ஏற்படுத்தும் தாக்கங்களைக் காட்டிலும் சாதியை அடிப்படையாகக் கொண்டு காட்டப்படும் பாரபட்சத்தினால் ஏற்படும் தாக்கங்கள் அதிகமாக இருக்கின்றன. வேறுசாதியைச் சேர்ந்தவர், வேறுவர்க்கத்தைச் சேர்ந்தவர் அல்லது வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என யாராக இருந்தாலும் அவர்கள் வீட்டு வேலையாட்களாக இருந்தாலும் சரி, இணையம் சார்ந்தகிக் தொழிலாளர்களாக இருந்தாலும் சரி அல்லது புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக இருந்தாலும் சரி, 'மற்றவர்களாக'தான்நடத்தப்படுவார்கள். சென்டர் ஃபார் இன்டர்நெட் அண்டு சொசைட்டி (CIS) க்காக பிளாட்ஃபார்ம்கள், பவர் அண்டு பாலிடிக்ஸ்: பெர்ஸ்பெக்டிவ்ஸ் ஃபரம் டொமெஸ்டிக் அண்டு கேர் ஒர்க் இன் இந்தியா எனும் ஆய்வறிக்கைக்கு இணை ஆசிரியராக இருந்த ஆராய்ச்சியாளர் அம்பிகா டாண்டன் இணையம் சார்ந்தகிக் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சில சாதிய ஒடுக்குமுறைகளைப் பற்றி விவாதித்தார். கழிப்பிடங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதி மறுக்கப்படுவது போன்ற கட்டுப்பாடுகள் உள்ள பொது இடங்கள், தொடர்ச்சியான அவமரியாதை, பணியிடத்தில் தரக்குறைவாக நடத்தப்படுவது போன்றவையும் இதில் அடங்கும். "சுகாதார"க் குறைவு தீண்டாமையுடன் தொடர்புடையது என்பதால், ஒரு தாழ்த்தப்பட்டத் தொழிலாளி ஓய்வெடுக்க வேண்டும் என்றாலும், முதலாளிகள் அவர்களை தங்கள் வீட்டில் ஓய்வெடுக்க அனுமதிக்க மாட்டார்கள். இந்த வீட்டு வேலையாட்கள்யார்கண்ணிலும்படாதவாறும் அவர்களின் முனகல் யார் காதிலும் விழாதவாறும்மாடிப் படிக்கட்டுகளில் தான் ஓய்வு எடுக்க வேண்டும். பிற தாழ்த்தப்பட்ட சாதிகள் மற்றும் மதங்களைச் சேர்ந்த சமையல்காரர்கள் தூய்மையற்றவர்களாகக் கருதப்படுவதால், மக்கள் குறிப்பாக பிராமண சமையல்காரர்களைக் கோருவார்கள்.

இணையம் சார்ந்தகிக் தொழிலாளர்கள், நிலையற்ற பணிச் சூழல் மாறுவதற்காகவும் படிமுறை ஊதிய பாகுபாடுகள் இல்லாமல் முதலாளிகள் கொடுக்கும் ஊதியத்திற்கு இணையான ஊதியம்பெறுவதற்காகவும் போராடுகிறார்கள். குறைந்த சம்பளத்தில் நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில் ஊழியர்கள் வேலை செய்வதை ஊக்குவிப்பதற்காகநிறுவனங்கள் படிமுறை ஊதிய வேறுபாட்டைப் பயன்படுத்தி, ஊழியர்கள் அறியாதவாறு ஒவ்வொரு ஊழியருக்கும் வேறு வேறு சம்பளத்தை கொடுக்கிறார்கள்.

"நெகிழ்வான" வேலை மற்றும் முகமற்ற நிர்வாகம்

தளப் பணிகள் உடனடிப் பணம் மற்றும் நெகிழ்வான பணி நேரங்கள் போன்ற தவறான வாக்குறுதிகளுடன் மக்களை ஈர்க்கிறது என்பதே அனைவரது குற்றச்சாட்டாக இருக்கிறது. ஆனால் உண்மையில், குறிப்பிட்ட குடும்பங்கள் அல்லது நிறுவனங்களால் நேரடியாகப் பணியமர்த்தப்படுவது போன்ற பிற பணிகளில் உழைப்பதைக் காட்டிலும்அவர்கள் எப்போதும் அதிக நேரம் உழைக்கிறார்கள். நெகிழ்வான வேலை நேரம் என்பது இணையம் சார்ந்தகிக் தொழிலாளர்கள் தங்கள் பணிகளை அவர்களே நிர்வகிக்க வேண்டும், கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அவர்கள் நேரத்தை செலவழிக்க வேண்டும் என்பதுடன் செயலிகளில் அதிக ஆர்டர்களைப் பெறுவதற்கு தயாராகக் காத்திருக்க வேண்டும். அவர்கள் தங்களுக்கு ஏற்ற சேவையைத் தேர்ந்தெடுப்பதற்கு நிறுவனங்களின் மறைமுகமான நெறிமுறைகளையும் கட்டணக் கொள்கைகளின் தயவையும் நம்பியுள்ளார்கள்.

தனக்குத் தோதுபட்ட நேரத்தில் வேலை செய்யலாம் என்ற கருத்தால் ஈர்க்கப்பட்ட 20 வயதான சந்தோஷ் என்ற இணையம் சார்ந்தகிக் தொழிலாளி, அது ஒரு பொய்யான வாக்குறுதி என்று விரைவில் அறிந்து கொண்டார். "செயலிக்கும் நிறுவனத்திற்கும் கொடுக்க வேண்டிய பங்கு போக ஒவ்வொரு நாள் வேலை முடிவிலும் என் வருமானம் போதுமானதாக இல்லை என்பதனால் இப்போது அதிக நேரம் உழைக்க வேண்டியுள்ளது"என்கிறார்.எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின் படி, உபர் இந்தியா தங்களின் ஊழியர்கள் நலனுக்கான செலவினங்களை வருடா வருடம் குறைத்த வகையில் 44% மாகக் குறைத்து நிதியாண்டு '22 இல், 150.96 கோடியாகக் குறைத்தது.

நான் உரையாடிய இணையம் சார்ந்தகிக் தொழிலாளர்களின் கூற்றுப்படி, குறிப்பாக நிறுவனங்கள் முதன்முதலில் பணியமர்த்தத் தொடங்கியபோது, புதிய ஊழியர்களுக்கு இந்த தளங்களில் சேர்வதற்கு ஊக்கத் தொகையும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆர்டர் கிடைப்பதற்கும்உறுதியளிக்கப்பட்டன. இருப்பினும், இவற்றில் பல வாக்குறுதிகள் திரும்பப் பெறப்பட்டன அல்லது தன்னிச்சையான மற்றும் கடுமையான மறைமுக விதிமுறைகளுக்கு உட்பட்டவையாக இருந்தன. உதாரணத்திற்கு, உணவு விநியோக நிறுவனமான சொமாட்டோவின் ஓட்டுநர்கள் ஒரு நாளில் 32 ஆர்டர்களை டெலிவரி செய்தால் கூடுதலாக ரூ.1500 சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் கூர்ந்து கவனித்ததில், அந்த இலக்கை அடைவதை செயலி வேண்டுமென்றே கடினமாக்குகிறது. சொமாட்டோ மற்றும் அதன் போட்டியாளரான ஸ்விக்கி ஓட்டுநர்களிடம் மேற்கொண்ட ஒரு முறைசாரா ஆய்வைப் பற்றி சுமன் தஸ்மஹாபத்ரா விவரிக்கிறார். "சில ஓட்டுநர்களுக்கு அதிக ஆர்டர்கள் வரும் நிலையில் மற்ற ஓட்டுநர்கள் ஒரு ஆர்டரைப் பெறுவதற்கு மணிக்கணக்கில் காத்திருப்பதை நாங்கள் கவனித்தோம். தினசரி ரூ. 1500 ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு ஒன்று அல்லது இரண்டு ஆர்டர்களே மிச்சமுள்ள ஓட்டுநர்கள் ஆர்டர்களைப் பெறுவதற்காக மணிக்கணக்கில் காத்திரக்கும் அதேவேளையில் தங்களுக்கு ஒதுப்பட்ட ஆர்டர் எண்ணிக்கையை எட்டாத ஓட்டுநர்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் ஆர்டர்களைப் பெறுவதைக் கண்டறிந்தோம். ஒரு டெலிவரி ஊழியர் ரூ.1500 போனஸ் பெறுவதற்காக ஒரு நாளைக்கு 14-16 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தது.

கூடுதலாக, ஒரு செயலி ஒரு முழு நாள் வேலையை வரையறுக்கும் விதமும் குழப்பமாக இருக்கலாம். அகில இந்திய இணையம் சார்ந்தகிக் தொழிலாளர்கள் சங்கத்தின் ஆய்வின்படி, ஸ்விக்கி தொழிலாளர்கள் தங்கள் அலைபேசி செயலியில் குறைந்தது 10 மணிநேரம் உள்நுழைந்திருக்க வேண்டும். இருப்பினும், சில நேரங்களில் இணைய இணைப்பில் சிக்கல்கள் இருந்தால் அவர்கள் வேலை செய்த முழு நேரத்தையும் செயலி துல்லியமாகப் பிரதிபலிக்காது. இதன் காரணமாக, சில தொழிலாளர்கள் ஒரு நாள் முழுவதும் வேலை செய்த பிறகும், வாக்குறுதியளிக்கப்பட்ட போனஸ் பெறுவதில்லை, மேலும் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பில்லை. ஆர்டர்களை டெலிவரி செய்வதற்காக, ஆரம்பத்தில் அவர்கள் பணிபுரியத் தேர்ந்தெடுத்த மண்டலத்திற்கு வெளியே செல்லும் போது, ஸ்விக்கி செயலி அவர்களை வெளியேற்றிவிடும் என்றும் ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். டெலிவரிக்கான தொகை அவர்களுக்குக் கொடுக்கப்பட்டாலும் அந்த நேரம் பணி நேரமாகச் சேர்க்கப்படுவதில்லை. அவர்கள் நேரத்தை செயலி அடிக்கடி குறைவாகக் கணக்கிடுவதால், ஊக்கத்தொகைக்குத் தகுதி பெறுவதற்காக, ஓட்டுநர்கள் ஒரு நாளைக்கு 10 மணி நேரத்திற்கும் அதிகமாக வேலை செய்யும் கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள்.

இதற்கும் மேலாக, ஒரு டெலிவரி பார்ட்னர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஆர்டரை ரத்து செய்தாலோ நிராகரித்தாலோ ரூ. 40 அபராதம் விதிக்கப்படும். புகாரைப் பதிவு செய்வதற்கு வாடிக்கையாளர் சேவை எண் மட்டுமே அவர்களுக்கு உள்ள ஒரே வழியாகும். இந்திய செயலி-அடிப்படையிலான போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் "முகமற்ற நிர்வாகம்" என்று கூறிக்கொண்டு இந்த தளங்கள் தங்கள் இணையம் சார்ந்தகிக் தொழிலாளர்களுடன் பேசி மத்தியஸ்தம் செய்வதால், தொழிலாளர்கள் உதவி பெறுவது அல்லது கொள்கைகள் பற்றித் தெளிவு பெறுவது கூட கடினமாக உள்ளது.

கோவிட் தொற்றுக்கு முன்னர், உபர் மற்றும் ஓலா போன்ற வாடகைக் கார் சேவை வழங்கும் நிறுவனங்களுக்காக பணிபுரியும் இணையம் சார்ந்தகிக் தொழிலாளர்கள் தங்கள் குழுத் தலைவர்களையும் கள நிர்வாகிகளையும் மாதத்திற்கு ஒரு முறை சந்தித்ததாகக் கூறுகிறார்கள். இணையம் சார்ந்தகிக் தொழிலாளர்கள் இப்போது தங்கள் தகவல் தொடர்பு தேவைகளுக்கு ஒரு செயலியை மட்டுமே நம்பியுள்ளனர். தங்களின் அழைப்புகளுக்கு நிர்வாகம் பதிலளிப்பதில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களின் ஊதியம், ஊக்கத்தொகை மற்றும் அபராதம் உள்ளிட்டவைத் தொடர்பான அனைத்தும் எங்கிருந்தோ தானாகவே கையாளப்படுகிறது. அவசர காலங்களில் தொலைபேசியில் தொடர்புகொள்ளக் கூடியவர்கள் யாரும் சுற்றிலும் இல்லை.

“உபர் அல்லது ஓலா நிறுவனம் ஓட்டுநர்களின் புகார்களுக்கு செவி மடுப்பதில்லை. கோவிட் தொற்று பரவுவதற்கு முன்னர், கொல்கத்தாவில் உபர் மற்றும் ஓலா ஆகிய இரு நிறுவனங்களின் அலுவலகமும் இருந்தது.அங்கு நாங்கள் வரிசையில் நின்று எங்கள் புகார்களை நிறுவனத்தின் பிரதிநிதிகளிடம் பதிவு செய்ய முடியும். ஆனால் கோவிட் தொற்று பரவிய காலத்தில்இந்தநடைமுறை மாறியது.இப்போது நாங்கள் வேலையில் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பற்றி அவர்களிடம் தெரிவிப்பதற்கு செயலியின் மூலம் ஒரு எண்ணை அழைக்க வேண்டும்.”என்று இப்போது உபர் மற்றும் ஓலா இரண்டிலும் பணிபுரியும் ஓட்டுநர் மோகன் ஜாதவ் கூறுகிறார்.

வீட்டுச் சேவைச் சந்தையான அர்பன் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களும்செயலி இயங்குதளத்தைப் பற்றி இதே போன்ற குறைகளைக் கொண்டுள்ளனர். முன்பெல்லாம், அர்பன் கம்பெனி அலுவலகத்தில் வரிசையில் நின்று நிறுவன ஊழியர்களிடம் தங்கள் புகார்களைப் பதிவு செய்யவும் அப்பாயின்ட்மென்ட் மற்றும் டோக்கன் எண்ணை பெறவும் முடியும். ஆனால் இப்போது செயலி மூலம் அவர்கள் ஒரு எண்ணை அழைக்கும் போது ஒரு வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதி இணைப்பில் வருவதற்கு மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.

அர்பன் கம்பெனியின் இணையம் சார்ந்தகிக் தொழிலாளியான ஹிந்தி பேசும் அங்கிதா பாண்டியா, "வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதி ஆங்கிலத்தில் பேசுகிறார், அதை நான் புரிந்துகொள்வதற்கு சிரமப்படுகிறேன், உங்கள் புகார் பதிவு செய்யப்படுவதற்கு நீங்கள் பல மணிநேரம் தொலைபேசியில் காத்திருக்க வேண்டும், மேலும் அவர்கள் அதைப் புகாராகப் பதிவு செய்தால் ஆயிற்று, ஏனென்றால் இது நிறுவனத்தின் கொள்கை ஏதும் செய்வதற்கில்லை என்பதே அவர்களின் பொதுவான பதிலாக இருக்கும்.” என்கிறார்.

குறிப்பாக அவர்களின்இணையம் சார்ந்தகிக் வேலைக்கான வருமானம் வராத வேளையில் இணையம் சார்ந்தகிக் தொழிலாளர்கள் தங்கள் புகார்களையும் சிக்கல்களையும் இந்தச் செயலிகளில் பதிவு செய்ய இயலாமல் போவது சவாலானதாகும். உதாரணத்திற்கு, ஒரு வாடிக்கையாளர் ஓட்டுநரைப் பற்றி நிறுவனத்திற்குப் புகார் அளித்த காரணத்தாலோ அல்லது ஒரு நட்சத்திர மதிப்பீட்டைக் கொடுத்த காரணத்தாலோ, உபர் மற்றும் ஓலா ஊழியர்களின் ஐடிகள் செயலியில் முடக்கப்பட்ட சூழல்களும் உள்ளன. உபர் மற்றும் ஓலாவின் டிரைவரான நிதாய் பால், “வாடிக்கையாளர்கள் காருக்குள் புகைப்பிடிப்பார்கள், எங்களிடம் கடுகடுப்பாகப் பேசுவார்கள் அல்லது நடுவழியில் வழியை மாற்றுவார்கள், ஆனாலும் நாங்கள் அவர்களிடம் எதுவும் சொல்லக் கூடாது என்று எதிர்பார்ப்பார்கள். நாங்கள் வாதிட்டால், வாடிக்கையாளர் எங்களைப் பற்றி செயலி வழியாகப் புகார் செய்வார், மேலும் எங்கள் ஐடிகள் உடனடியாகத் முடக்கப்படும்." என்று கூறுகிறார்.

இணையம் வழிகிக் தளங்கள் தங்கள் தொழிலாளர்களை ஊழியர்களாக வகைப்படுத்த மறுப்பது, அந்த இணையம் சார்ந்தகிக் தொழிலாளர்களுக்கான அடிப்படை தொழிலாளர் பாதுகாப்பைப் பறிக்கும் செயலாகும். இந்த சிக்கலான அமைப்பிற்குள் அவர்கள் பேரம் பேசும் வாய்ப்பு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, ஏனெனில் அவர்களுக்கு கொடுக்கப்படும் ஆர்டர்களை மறுக்கக்கூட அவர்களுக்கு அனுமதியில்லை; அவர்கள் அவ்வாறு செய்தால், அவர்களின் ஐடிகளை இடைநிறுத்துவதற்கான உரிமையை இணையம் வழிகிக் தளங்கள் வைத்திருக்கின்றன. ஒரு முறையான பணியிடத்தில், ஊழியர்கள் பொதுவாக மனித வளங்களுக்கு பொறுப்பான ஒருவருடன் இணைக்கப்பட்டுள்ளனர். வேலை இழப்பிற்கான இழைப்பீட்டைப் பெறுவதற்கான வழி அவர்களுக்கு இருக்கிறது, மேலும் முன்னறிவிப்பின்றி ஊழியர்களை பணிநீக்கம் செய்வதிலிருந்து பெருநிறுவனங்களை தடுப்பதற்கு இந்தியாவில் நெடுங்காலமாக இயங்கிவரும் தொழிற்சங்கங்களும் தொழிலாளர் சங்கங்களும் அதிகாரம் பெற்றிருக்கின்றன.

போதுமான பாதுகாப்பு இல்லாததையும் ஏற்ற இறக்கமான வேலை மற்றும் இழப்பீட்டுக் கொள்கைகளையும் இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் எதிர்கொள்கிறார்கள். பல இணையம் சார்ந்தகிக் தொழிலாளர்கள், வாகனங்களுக்கான தங்களின் முன்கூட்டிய முதலீடுகள், பராமரிப்பு செலவுகள் மற்றும் பிற மூலதனச் செலவுகள் காரணமாக, மோசமாகிக் கொண்டே இருக்கும் இந்தப் பாதுகாப்பற்ற சூழ்நிலையிலும் தங்கள் நலனைக் காத்துக்கொள்வதற்கு முயற்சி செய்கின்றனர்.

அவர்களுக்கு போக்குவரத்து வசதி இருந்தாலும், அவர்களின் சொற்ப ஊதியத்தில் பெட்ரோலுக்கும் அலைசிபேசி இணையச் சேவைக்குமான செலவுகளைச் சமாளிப்பது கடினமாக இருக்கிறது. ஓலா மற்றும் உபர் இணையம் சார்ந்தகிக் தொழிலாளர்கள், நல்ல நிலையில் இயங்கும் குளுகுளு சாதனத்துடன் சுத்தமாகக் காரை பராமரிக்க வேண்தியது அவசியமாக இருக்கிறது. சில தொழிலாளர்கள் கட்டாய அடிப்படைப் பயிற்சிக்காகவும், பணி நேரங்களிலும் அணிய வேண்டிய ஆடைகளைப் பெறுவதற்கும் முன்கூட்டியே பணம் செலுத்தியாக வேண்டியுள்ளது.

2022 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் எரிபொருளின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து, கோவிட் தொற்றுக்கு முந்தைய அளவை விட அதிகமாகவே இருந்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக கொல்கத்தாவில் உபர் டிரைவராகப் பணியாற்றிய சஷிகாந்த் குமார், பத்து மணி நேர ஷிப்டுக்கு சுமார் ரூ. 2000சம்பாதிப்பதாகவும், அதில் கால் பங்கை எரிபொருளுக்காக செலவிட்டதாகவும் கூறினார். "பெட்ரோல் விலை உயர்ந்து வருவதைப் பார்த்தால், கார் ஓட்டுவதைத் தொடர்வது இயலாததாகிவிட்டது," என்கிறார் குமார். மற்றொரு இணையம் சார்ந்தகிக் தொழிலாளியான தப்ரேஸ் ராசா, உபருக்கு முதலில் வாகனம் ஓட்டத் தொடங்கியவர் கார் பராமரிப்புச் செலவுகள் காரணமாக ஓலா நிறுவனத்திலும் வேலைக்குச் சேர்ந்ததாகக் குறிப்பிட்டார்.

---

தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் உரிமைகளுக்கான போராட்டம்

தொழில்நுட்பத் தளங்களால் சுயாதீன ஒப்பந்தக்காரர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள அனைவரும் எதிர்கொள்ளும் சவால்களுக்கு எதிராக கூட்டாகப் போராடுவதற்காகஇணையம் சார்ந்தகிக் தொழிலாளர்களின் பல தொழிற்சங்கங்களும் அமைப்புகளும் கடந்த சில ஆண்டுகளில் உருவாகியுள்ளன. தெலுங்கானா கிக் அண்டு பிளாட்ஃபார்ம் ஒர்க்கர்ஸ் யூனியன், இந்தியன் ஃபெடரேஷன் ஆஃப் ஆப்-பேஸ்டு டிரான்ஸ்போர்ட் ஒர்க்கர்ஸ் (IFAT), மற்றும் ஆல் இந்தியா கிக் ஒர்க்கர்ஸ் யூனியன் போன்றவை மிகவும் பிரபலமான தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளாகும்.ஆனால் மேற்கு வங்க ஆன்லைன் கேப் ஆபரேட்டர்கள் கில்ட் போன்ற சிறிய பிராந்திய அமைப்புகளும் உள்ளன. IFAT தோராயமாக 36,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது என்பதுடன் இதுதான் பெரும்பாலும் இணையம் சார்ந்தகிக் தொழிலாளர்கள் முதலில் குறிப்பிடும் தொழிற்சங்கமாகும். தெலுங்கானா கிக் அண்டு பிளாட்ஃபார்ம் ஒர்க்கர்ஸ் யூனியனில் 10,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் 2023 ஆம் ஆண்டு கிக் மற்றும் இயங்குதள ஊழியர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை டிஜிட்டல் ஐடி கார்டுகளாக வழங்கத் தொடங்கியது.

சிறந்த பனிச் சூழல்களுக்காகவும் இணையம் சார்ந்தகிக் தொழிலாளர்களுக்கான பாதுகாப்புக்காகவும் தொழிற்சங்கங்கள் போராடுகின்றன. அவர்கள் உபர், ஓலா, அர்பன் கம்பெனி, சொமாட்டோ, ஸ்விக்கி மற்றும் இதே போன்ற இணையம் சார்ந்தகிக் எகானமி தளங்களில் இணையம் சார்ந்தகிக் தொழிலாளர்களை ஊழியர்களாக அங்கீகரித்து அவர்களுக்கான உரிமைகளை வழங்குவதற்காக பரிந்து பேசுகிறார்கள்.

ஆல் இந்தியா கிக் ஒர்க்கர்ஸ் யூனியனின் தஸ்மஹாபத்ரா, “இந்த நிறுவனங்கள் தந்திரமாக, இணையம் சார்ந்தகிக் தொழிலாளர்களை நிறுவனத்தின் 'பங்குதாரர்கள்' என்று முத்திரை குத்துகிறார்கள். ஊதியம் பெறும் வழக்கமான ஊழியரை விட ஒரு பங்குதாரர் அதிக நேரம் உழைத்தாலும், அவர்களை ஊழியர்களாகக் கருதுவதில்லை.நிறுவனங்களுக்கும் இணையம் சார்ந்தகிக் தொழிலாளர்களுக்கும் இடையேயான அதிகார இயக்கவியல் சமமற்றதாக இருப்பது அப்பட்டமாகத் வெளிப்படத் தொடங்கியதால், புதிய கூட்டாண்மையின் ஆரம்ப உற்சாகம் விரைவில் மறைந்தது” என்கிறார். இயங்குதளங்கள் தொழிலாளர்களின் புகார்களுக்கு செவிமடுக்காமல் இருப்பதாலும், ஊதிய உத்தரவாதமோ சலுகைகளோ இல்லாதத்தாலும், சில சூழ்நிலைகளில் தொழிலாளர்களைக் கண்காணிப்பது அதிகரிப்பதாலும் இணையம் சார்ந்தகிக் வேலை நிலையில்லாத வருமானம் ஈட்டுவதற்கான வழி எனும் அவப்பெயரைக் கொண்டுள்ளது.

டிப்ஸ் கொடுக்காத அல்லது அவர்களைச் சந்தேகிக்கும் வாடிக்கையாளர்கள், சில சமயங்களில் தொழிலாளர்களே பணம் செலுத்துகிறார்கள்; லிஃப்ட் பயன்படுத்த அனுமதிக்காத கட்டடச் சங்கங்கள்; பாதுகாப்புச் சிக்கல்கள் போன்ற தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட பல சவால்களை இந்தத் தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர். துப்பாக்கி முனையில் கொள்ளயடிக்கப்படுவதால் பாதிக்கப்பட்டவர்களைப்போன்றவர்கள்இந்த தொழிலாளிகள் என்று சமூக ஊடகப் பதிவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஒரு உபர் ஓட்டுநர் கல்லாலும் பீர் பாட்டிலாலும் தாக்கப்பட்டார்; இந்தியாவில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான ஆயுதமாக முழங்கப்படும் இந்து மத முழக்கமான "ஜெய் ஸ்ரீ ராம்" என்று கத்தாததற்காக மற்றொரு ஓட்டுநர் பின்தொடரப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டார்; 23 வயதான ஒரு ஸ்விக்கி ஊழியரின் மீதுவாடிக்கையாளரின் செல்லப் பிராணியான ஜெர்மன் ஷெப்பர்ட் பாய்ந்ததில் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து இறந்தார். தொழிலாளர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அவர்களை சிறந்த முறையில் தயார்படுத்துவதில் தொழிற்சங்கங்கள் பங்கு வகிக்கிப்பதுடன் அவர்களின் உரிமைகளை வலுப்படுத்துவதற்காக சட்ட நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கின்றன.

தொழிற்சங்கங்களின் முதன்மையான உத்தியாக பொது நல வழக்குகள் தொடரப்பட்டு வருகிறது.இது இணையம் சார்ந்தகிக் தொழிலாளர்களை ஊதியம் பெறும் ஊழியர்களாக அங்கீகரிக்கவும்பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கிறது. ஒரு முதன்மையான உதாரணமாக, 2021 இல் தாக்கல் செய்யப்பட்ட ஒரு பொதுநல வழக்கில், முறைசாரா தொழிலாளர்கள் சமூக நலப் பாதுகாப்புச் சட்டம், 2008இன் கீழ் இணையம் சார்ந்தகிக் தொழிலாளர்கள் "முறைசாரா தொழிலாளர்கள்" அல்லது "ஊதியம் பெறும் ஊழியர்கள்" ஆக அவர்களின் உரிமைப் பலன்களைப் பெறுவதை உறுதி செய்யுமாறு IFAT உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டது.

மற்றொரு உத்தியாக, இணையம் சார்ந்தகிக் எகானமி செயலிகள் எவ்வாறு அவர்களைச் சுரண்டுகின்றன என்பதையும், அவர்கள் எவ்வாறு உடன்பட மறுக்கலாம் என்பதையும் பற்றி ஒருவருக்கு ஒருவர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளச் செய்வதன் மூலம்இணையம் சார்ந்தகிக் தொழிலாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. உதாரணத்திற்கு, பல இணையம் சார்ந்தகிக் தொழிலாளர்கள் ஆங்கிலம் பேச மாட்டார்கள் என்பதுடன் செயலிகள் அதிகமாக எடுக்கும் கமிஷன் விகிதங்களைப் புரிந்து கொள்ளவும் அதை மறுக்கவும் இயலாதவர்கள் ஆவார்கள். IFAT மற்றும் ஆல் இந்தியா கிக் ஒர்க்கர்ஸ் யூனியன் ஆகியவை சந்திப்புகள் மூலம் வாடகைக் கார் ஓட்டுநர்களுக்கும் டெலிவரி தொழிலாளிகளுக்கும் இந்த நியாயமற்ற நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. IFAT வின் மேற்கு வங்க பிரிவைச் சந்திக்க நான் சென்றபோது, ஓலா மற்றும் உபர் ஓட்டுநர்கள் கோடைக்காலத்தில் வெப்ப அலைகள் அதிகரிக்கும் போது பாதுகாப்பாக ஓட்டுவது எப்படி என்ற மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர். IFAT தொழிலாளர்களை ஒட்டுமொத்தமாகப் பாதுகாப்பதற்கும், ஒழுங்கமைப்பதன் மூலம் சங்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை இது காட்டுகிறது.

இந்த தளங்களுக்கு எதிராக இணையம் சார்ந்தகிக் தொழிலாளர்களும் அவர்களது தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளும் வேலை நிறுத்தங்களையும் போராட்டங்களையும் ஏற்பாடு செய்கின்றன. இயங்குதளத்தில் அர்பன் நிறுவனத்திற்காகப் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் அழகு கலைஞர்களும் ஸ்பா உதவியாளர்களும் குறைந்தஊதியம், அதிக கமிஷன்கள் மற்றும் வேலையில் பாதுகாப்பற்ற நிலைமைகளை எதிர்த்து அக்டோபர் 2021 இல் வேலைநிறுத்தம் செய்தார்கள். அர்பன் நிறுவனம் காப்பீடு வழங்கவில்லை என்றும், 30% வரை கமிஷன் எடுப்பதாகவும், 30க்கும் குறைவான வேலைகளை செய்தால் மாதக் கட்டணம் வசூலிப்பதாகவும் பெண்கள் கூறினர். மேலும், விலையுயர்ந்த அழகு சாதனப் பொருட்களை நிறுவனத்திடமிருந்து அவர்கள் வாங்க வேண்டிய கட்டாயமிருந்தது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தவர்களின் சில கோரிக்கைகளை அர்பன் நிறுவனம் நிவர்த்தி செய்த அதேவேளையில், வேலை நிறுத்தத்திற்கு எதிர்வினையாக, மற்றப் பங்குதாரர்கள் வேலைக்குச் செல்வதைத் தடுப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அச்சுறுத்தவும் செய்தது.

IFAT மற்றும் மேற்கு வங்க ஆன்லைன் கேப் ஆபரேட்டர்ஸ் கில்டின் பொதுச் செயலாளரான இந்திரனில் பானர்ஜி, பிளாட்ஃபார்ம் எகானமி செயலிகளுக்கு எதிராக முற்றுகைப் போராட்டம் பயன்படுத்துவதை விவரிக்கிறார். முற்றுகை என்பது ஒரு வகையான போராட்டமாகும், இதில் ஊழியர்கள் தங்கள் மேலாளர்கள் அல்லது மேலதிகாரிகளை தங்கள் கோரிக்கைகள் பூர்த்தியாகும் வரை பணியிடத்தை விட்டு வெளியேற அனுமதிக்க மறுபார்கள். முற்றுகைப் போராட்டம் மேற்கு வங்கத்தில் தோன்றியது. 1960 களின் பிற்பகுதியில் மேற்கு வங்காள ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் முதல் தொழிலாளர் அமைச்சராகவும் பொதுப்பணித் துறையின் அப்போதைய தலைவராகவும் இருந்த சுபோத் பானர்ஜி, தொழிலாளர் துறையில் எதிர்ப்பை முறையாகக் காட்டுவதற்காக இப்போராட்ட அறிமுகப்படுத்தினார். அன்றிலிருந்து பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்க நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக முற்றுகைப் போராட்டம் அவ்வப்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொல்கத்தாவில் உள்ள ஓலா மற்றும் உபர் அலுவலகங்களைச் சுற்றி IFAT முற்றுகைப் போராட்டங்களை எவ்வாறு ஏற்பாடு செய்தது என்பதைப் பற்றி இந்திரானில் பானர்ஜி பேசினார்.போராட்டத்திற்கான காரணம்"தொழிலாளர்களின்கோரிக்கைகளை நிறுவனங்கள் நிறைவேற்றத் தவறிவிட்டன அல்லது செயலியில் உள்ள நியாயமற்ற நடைமுறைகளுக்கான காரணத்தைப் பற்றிகூறத் தவறிவிட்டன." இந்திரானில் பானர்ஜியின் கூற்றுப்படி, இந்த முற்றுகைகள் காவல்துறையின் கவனத்தை ஈர்த்தது, போராட்டத்தை அவர்களால் சமாளிக்க முடியாத காரணத்தால் ஓலா மற்றும் உபர் ஊழியர்களை இணையம் சார்ந்தகிக் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவோ அல்லது வேறு இடத்திற்கு மாறிக்கொள்ளவோ கேட்டுக் கொண்டனர்.

இணையம் சார்ந்தகிக் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும்போராட்டம்நடத்த உதவுவதும் மட்டுமே அவர்களை ஒரு கூட்டுக் குழுவாக அமைப்பதற்கு தொழிற்சங்கங்களுக்கு போதுமானதாக இருக்காது. ஊடகக் குழுமங்களும் இந்த தளங்களின் உள் செயல்பாடுகளையும் பொது மக்கள் மீதான தாக்கத்தையும் பரவலாக பொது மக்களுக்கும் ஒழுங்குமுறைக் குழுக்களுக்கும் அம்பலப்படுத்துவதற்காக புலனாய்வு செய்து வருகின்றன. கண்கானிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கான உபரின் இரகசிய உத்திகள், அமைப்பை வளைப்பதற்காக கையாளும் பரப்புரை முறை, ஒழுங்குமுறையில் உள்ள குறைகளை சாதகாமகப் பயன்படுத்துவது ஆகியவற்றை அம்பலப்படுத்துவதற்காக புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பும்(ICIJ), தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸும்இணைந்து பணியாற்றின. உபர் பைல்ஸ் இன்வெஸ்டிகெஷன் வெளியானதைத் தொடர்ந்து உபர் மீது நடவடிக்கை எடுக்க IFAT கோரிக்கை விடுத்தது. நிறுவனம் "சந்தையைப் பிடிப்பதற்காக சட்டத்தையும் நெறிமுறை தரங்களையும் எவ்வாறு சமரசம் செய்துகொண்டு" அதன் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியது என்பதை அந்த ஆவணங்கள் காட்டுவதாகக் கூறினார்கள்.

அரசியல்வாதிகளும் அரசாங்க குழுக்களும் இணையம் சார்ந்தகிக் தொழிலாளிகளின் பிரச்சனைகளில் கவனம் செலுத்தி அவற்றைத் தணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளனர். பிப்ரவரியில் வெளியிடப்பட்ட பட்ஜெட்டில், இணையம் சார்ந்தகிக் தொழிலாளியின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக ராஜஸ்தானின் முதலமைச்சர் அசோக் கெலாட் ரூ. 200 கோடி (பத்து மில்லியனைக் குறிக்கும் எண் அலகு) ஒதுக்கி, புதிய சட்டத்தையும் அது தொடர்பான ஒரு வாரியத்தையும் உருவாக்கினார். இது ராஜஸ்தானில் உள்ள 225,000-270,000இணையம் சார்ந்தகிக் தொழிலாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பான எதிர்காலத்திற்கு வழிவகுக்கிறது. இந்த அறிவிப்பின் மூலம், இணையம் சார்ந்தகிக் தொழிலாளர்களின் சில கோரிக்கைகளை அர்த்தமுள்ள வகையில் தீர்க்கும் முதல் மாநிலமானது ராஜஸ்தான். இந்த சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

IFAT இன் உறுப்பினர்களின் கூற்றுப்படி, அடுத்த கட்டமாக, இந்த இணையம் சார்ந்தகிக் ஒர்க் தளங்களிடம் அவர்கள் செயல்படும் பிராந்தியங்களில் புதிதாக உருவாக்கப்பட்ட இந்த வாரியம் வரிகள் வசூலிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இணையம் சார்ந்தகிக் தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்படும் ஒவ்வொரு பயணத்திற்கும் அல்லது டெலிவரிக்கும் இந்த வரி கூடுதல் கட்டணமாக இருக்கும். இந்த பணம், இணையம் சார்ந்தகிக் தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களுக்கு உடல்நலம் மற்றும் விபத்து காப்பீடு, அத்துடன் வருங்கால வைப்பு நிதி, அரசாங்க நிதியளிக்கும் ஓய்வூதியம் ஆகியத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.

“இது இணையம் சார்ந்தகிக் தொழிலாளர்களின் உரிமைகளை அங்கீகரிப்பதற்கான நீண்ட போராட்டமாகும். நாங்கள் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது” என்று IFAT வின் பானர்ஜி கூறுகிறார். நான் உரையாடிய வரையில் இந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான அவர்களின் போராட்டத்தின் போக்கு மெதுவாக இருப்பதால் இணையம் சார்ந்தகிக் தொழிலாளர்கள் விரக்தியடைந்துள்ளனர். பல இணையம் சார்ந்தகிக் தொழிலாளர்கள் தங்கள் சாதி, வர்க்கம் மற்றும் குடியுரிமை நிலைகள் காரணமாக இந்தியச் சமூகப் படிநிலையில் ஒப்பீட்டளவில் ஆபத்தான மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். இணையம் சார்ந்தகிக் தொழிலாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வைப்பதற்கு அரசியல்வாதிகளுக்கும் இந்த நிறுவனங்களுக்கும் அழுத்தம் கொடுப்பதற்கு போதுமான வலுவான தொழிலாளர் சக்தியை உருவாக்குவது சவாலாக உள்ளது. “உங்களுக்கு எதிரி இருந்தால், அவர்களுக்கு ஒரு காரை வாங்கிக் கொடுத்து, உபர் மற்றும் ஓலாவுக்குப் பயன்படுத்துவதற்காக கமர்ஷியல் காராக உரிமம் பெற்றுக் கொடுங்கள். வாகனத்தை பராமரிக்கும் செலவை நினைத்து வாழ்நாள் முழுவதும் அவர் வருந்துவார். அவரால் வெளியேறவும் முடியாது, மேலும் அந்த காரை வைத்து வருமானம் ஈட்டவும் முடியாதுஎன்று உபர் மற்றும் ஓலா என இரண்டு நிறுவனங்களுக்கும் கார் ஓட்டுநராக இருக்கும் தீபக் மொண்டல் கூறுகிறார்.

கூட்டு நடவடிக்கையின் வலுவான முயற்சிகளும் அரசாங்க முயற்சிகளும் இந்த புதிய டிஜிட்டல் மத்தியஸ்த இணையம் சார்ந்தகிக் பொருளாதாரம் விரைவில் மேம்படும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

அக்னி கோஷ் இந்தியாவிலிருந்து செயல்படும் ஒரு சுயாதீன பத்திரிகையாளர் ஆவார், அவர் NPR, BBC, The New Humanitarian மற்றும் Vice ஆகியவற்றில் பாலினம், உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பற்றி எழுதியுள்ளார்.

Agnee Ghosh is an independent journalist based in India who has written for NPR, BBC, The New Humanitarian, and Vice on gender, health, and the environment.

This piece appears in Logic's upcoming issue 19, "supa dupa skies (move slow and heal things)." Subscribe today to receive the issue as part of a subscription, or preorder at our store in print or digital formats.